இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர். மரைன் போலீசார் அவர்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசின் பல்வேறு  கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.

இலங்கை கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த பாரதிதாஸ் (42), இவரது மகன்கள் பாவனா குர்சந்தன் (17), பாவனா அருள் (15), மகள் பாவனா பிரித்திகா (10), பாரதிதாஸின் தாய் முனியம்மா (75) ஆகியோர் நேற்று நள்ளிரவில் இலங்கையில் இருந்து படகில் புறப்பட்டு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர். சேரான்கோட்டை வடக்கு கடற்கரை பகுதியில் இவர்களை இறக்கிவிட்டு படகோட்டிகள் திரும்ப சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து வந்தவர்கள் குறித்து இப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராமேஸ்வரம் மரைன் போலீசார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். முழுமையான விசாரணைக்குப் பின்னர், இவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Related Stories: