திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வெளிநாட்டு பெண் சிவ தாண்டவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துருக்கி நாட்டு பெண் சிவ தாண்டவம் ஆடியதை பக்தர்கள் வியந்து ரசித்து பார்த்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர்.கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் தனது கணவருடன் வந்து தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் அந்த பெண் பக்திப்பெருக்கால் திடீரென 3ம் பிரகாரத்தில் சிவ தாண்டவம் ஆடினார். அவரது கணவர், மனைவியின் நடனத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்கள், இவரது நடனத்தை பார்த்து வியப்படைந்தனர். வெகுவாக வியந்து பார்த்தனர்.

இதற்கிடையில் கோயில் 3ம் பிரகாரத்தில் பிடாரியம்மன் சன்னதிக்கு அருகே வில்வமரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள மரப்பல்லியை பார்ப்பது நல்லது என்று நேற்று திடீரென தகவல் பரவியது. இதனால் பக்தர்கள், அங்கு சென்று பல்லியை பார்த்தனர். மேலும், செல்போனில் படம் எடுத்தும் சென்றனர்.

Related Stories: