×

கேரளாவில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் நேரில் ஆய்வு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் இன்று (23.01.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாதன், தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன், தலைமைக் கட்டட கலைஞர் மைக்கேல் ஆகியோர் உடன் இருந்தனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் சமூக போராட்டத்தினை நினைவு கூறும் வகையில் 70 சென்ட் பரப்பளவில் நினைவக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நினைவகத்தில் 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடம், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடம், சிறுவர் விளையாட்டு பூங்கா, இரு பாலருக்கான கழிவறை கட்டிடம், சுற்றுச்சுவர் வசதி ஆகியவற்றுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் நிருவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியார் அவர்களை சந்தித்த தலைவர்கள், பெரியார் அவர்கள் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள், உள்ளிட்ட  புகைப்படங்களின் தொகுப்பு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை அடுத்து இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியார் அவர்களின் திருவருச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆணையை ஏற்று, நானும், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தித் துறை இயக்குநர், பொதுப்பணித் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளர்கள் மற்றும் ஏனைய பொறியாளர்களுடன், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் கேரள மாநிலம், வைக்கம் பகுதிக்கு 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாபெரும் போராட்டத்தை இங்கே நடத்தினார்கள். அதாவது, ஏளவர்கள், புளையர்கள் தெருக்குள்ளே போகக்கூடாது என்ற நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அந்த போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த திரு.கே.பி.கேசவமேனன் என்பவர் தான் முதன் முதலாக சுதந்திரத்தைப் பெற்று தந்த மகாத்மா காந்தி அவர்களுக்கு “இங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நாங்கள் சிறைக்கு போய்விட்டோம். இனி இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துவதற்கு யாரும் இல்லை என்ற நிலை உள்ளது” என்று கடிதம் எழுதினார்.

மகாத்மா காந்தி அவர்கள் அதற்கு, வடபுலத்திலிருந்து அனுப்புவதற்கு எங்களிடத்தில் யாரும் தலைவர்கள் இல்லை, அருகிலேயே தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் தலைவர் இருக்கிறார், அதுவும் இதே நோக்கமாக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர், அவர் தான் இதற்கு பொருத்தமானவர் என்று தந்தை பெரியார் அவர்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், மகாத்மா காந்தி அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தொடர்பு கொண்டு, இப்படி ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்று அவருக்கு நினைவில் கொண்டு வந்ததன் அடிப்படையில் தான், 1924-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்திற்கு வந்தார்கள்.

வைக்கம் போராட்டம் என்பது அந்த காலத்தில், தமிழகத்திலும், கேரளாவிலும் பேசப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம். தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தால் ஒரு முறைக்கு, இரண்டு முறை சிறைக்கு சென்றார்கள். எனவே, அந்த நினைவுகளை போற்றுகின்ற வகையில், நாட்டு மக்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும் இந்நிகழ்வினை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே 1984ல் எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், இங்கே கேரளா அரசின் சார்பாக சுமார் 70 சென்ட் இடத்தை தமிழ்நாடு அரசிற்கு வழங்கியிருக்கிறார்கள்.

அந்த இடத்தில்தான் இப்படியொரு நினைவகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து 1984-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1994-ஆம் ஆண்டு இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய மொத்த பரப்பளவு ஏறத்தாழ 700 சதுர அடிதான். இதில் தான் தந்தை பெரியாருடைய புகைப்படக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அரசு இந்த இடத்தை கொடுக்கின்றபோது அதில் அலுவலர்கள் தங்கியிருக்கிற குடியிருப்பு இருந்திருக்கிறது. அது மிக மோசமான நிலையில் தற்போது உள்ளது. இதனை எல்லாம் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்து போராடியது, அடுத்த 2024ஆம் ஆண்டுடன் 100 ஆண்டு காலம் முடிவடைகிறது. தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வருகை புரிந்து 100 ஆண்டுகள் முடிகின்றதை மனதில் வைத்துக் கொண்டுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தற்போது இங்கு என்ன நிலையில் இருக்கிறது என்பதற்காக என்னையும், அமைச்சர் அவர்களையும் அனுப்பி அதனுடைய நிலைய குறித்தும், இதை புனரமைக்கலாமா, புதுப்பிக்கலாமா, புதியதாக கட்டலாமா என்பது குறித்தும் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யச் சொன்னார்கள்.

இதன் அடிப்படையில் இன்று நாங்கள் ஆய்வுகள் மேற்கொண்டோம். இங்கே இருக்கிற நிலைகளை முதலமைச்சர் அவர்களிடத்தில் போய் எடுத்துச் சொல்வோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள். எனவே ஆய்வுப் பணியை நாங்கள் மேற்கொள்ள வந்தோம், அந்தப் பணியை இப்போது நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். ஏனைய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்கள் இவ்வாறு கூறினார்.


Tags : A.V.Velu ,Saminathan ,Father Periyar ,Memorial ,Kerala , Ministers AV Velu and Saminathan personally inspected Father Periyar Memorial located in Kerala..!
× RELATED தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா