×

புதுச்சேரியில் சாலையோர தடுப்பு கட்டையில் வேன் புகுந்து 2 பேர் பலி: 5 பேர் காயம்

வானூர்: புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட விக்டர் சுரேஷ்(60), இவரது மனைவி தமிழரசி(57), மகன் அலூயின்(36), இவரது மனைவி வினோதினி, இவர்களது ஒன்றரை வயது மகள் வினாலினி மற்றும் வினோதினியின் தம்பி விக்னேஸ்வரன்(35) ஆகியோர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு வரும் பிப்ரவரி 2ம் தேதி புதுச்சேரியில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக இவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர். இவர்களை அழைத்து வருவதற்காக புதுச்சேரி சாரம் இந்திரா நகர் கண்ணகி வீதியை சேர்ந்த விக்டர் சுரேஷ் சகோதரி சுஜாதா(62) என்பவர் வேனில் நேற்று அதிகாலை சென்னை சென்றார். சுஜாதாவிற்கு துணையாக அதே பகுதியை சேர்ந்த சங்கர், சுகுந்தன் ஆகியோரும் சென்றனர். வேனை டிரைவர் துரை என்பவர் ஓட்டிச்சென்றார்.

சென்னை விமான நிலையம் சென்ற இவர்கள் அங்கு இருந்த சுரேஷ் உள்பட உறவினர்கள் 6 பேரையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரி திரும்பினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் அருகே உள்ள கீழ்கூத்தப்பாக்கம் பகுதியில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறம் சாலையோரத்தில் இருந்த இரும்பாலான தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரும்பு தடுப்பு கட்டை வேனில் முன்பகுதியில் சொருகி பின்பகுதியில் வெளியே வந்தது. மேலும், வேன் இரும்பு தடுப்புடன் சுமார் 20 தூரம் சென்று நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சுரேஷ், குழந்தை வினாலினி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மேலும், படுகாயங்களுடன் தவித்த தமிழரசி, விக்னேஸ்வரன், வினோதினி, சுகுந்தன், டிரைவர் துரை ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் அலூயின், சுஜாதா, சங்கர் ஆகியோர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : Vane ,Puducherry , 2 dead, 5 injured in Puducherry as van rams into roadside barricade
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...