மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை

சென்னை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றிவரும் 1660 சிறப்பு பயிற்றுனர்கள் பணி நிலைப்பு கோரி சென்னையில் இன்று காலை முதல் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை பா.ம.க. ஆதரிக்கிறது. மாற்றுத்திறன் மாணவர்கள் 1.30 லட்சம் பேருக்கு பயிற்றுவிப்பது தான் இவர்களின் பணியாகும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல.

கூடுதல் கவனமும், சகிப்புத் தன்மையும் அவசியமாகும். ஆனால், அதற்கேற்ற ஊதியம், சமூகப்பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. 1998 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்கள், பணி நிலைப்பு கோரி கடந்த  15 ஆண்டுகளில் 8 முறை  உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுனர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை  அங்கீகரிக்கும் வகையில் அவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: