×

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் சர்ச்சை குறித்த விசாரணையை மேற்பார்வை செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள பாலியல் சர்ச்சை குறித்த விசாரணையை மேற்பார்வை செய்ய மேரிகோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பலர் தர்ணா போராட்டத்தில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை.

மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர் என்று மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒன்றிய விளையாட்டுத்துறைக்கு 8 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் எழுதியிருந்தது. எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை; வீரர்கள் வேண்டுமென்றே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, அரியானாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கண்டித்து, உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் பிரிவில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத்தும் குழுவில் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் குழுவை இந்திய ஒலிம்பிக் கமிட்டி அமைத்துள்ளது.


Tags : Union Government ,Indian Wrestling Federation , Wrestling Federation of India, Sex Controversy, Committee, Union Govt
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...