மெல்போர்ன்: கிராண்ட்ஸ் லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், 5ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா, 12வது ரேங்க் வீராங்கனை சுவிட்சர்லாந்தின் 25 வயது பெலின்டா பென்சிக் மோதினர். விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என சபலென்கா கைப்பற்றினார். 2வது செட்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-2 என தன்வசப்படுத்தினார். முடிவில் 7-5, 6-2 என வெற்றி பெற்ற சபலென்கா கால் இறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசின் 30 வயதான கரோலினா பிளிஸ்கோவா, சீனாவின் ஜாங் ஷூவாய்(34) உடன் மோதினார். இதில் அதிரடி காட்டிய பிளிஸ்கோவா முதல் செட்டை 6-0 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டையும் 6-4 என தன்வசப்படுத்திய பிளிஸ்கோவா கால்இறுதிக்கு தகுதி பெற்றார். குரோஷியாவின் 26 வயது டோனா வெகிக் 6-1, 1-6, 6-3 என 17 வயதான செக்குடியரசின் லிண்டாவை வீழ்த்தினார். 4ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியா 6-7, 4-6 என்ற செட் கணக்கில், போலந்தின் மக்தா லினெட்டிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.