மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம்; திருவள்ளூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை: பிரமாண்ட மேடை பணிகள் தீவிரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில் நாளை மறுநாள் (25ம் தேதி) மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே பொதுக்கூட்டம் நடத்துவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் திமுக கொடிக் கம்பம் நடுதல், வண்ண மின்னொளி அலங்காரம் அமைத்தல் போன்ற பணிகளில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பால்வளத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு நாசர், மாவட்ட செயலாளர்கள் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்துகொள்வதற்கான பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். பொதுக்கூட்ட மேடை அருகே அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் கட் அவுட்டுகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேடை அமைக்கும் இடத்தினையும் மேடை அமைக்கும் பணிகளையும் காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி பகலவன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது டிஐஜி பகலவன், பைக், கார், பஸ், வேன் ஆகிய வாகனங்களில் வருபவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார். ஆய்வின்போது திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவநாராயணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ம பபி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: