தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா நடந்தது: ஸ்ரீ தேவி, பூதேவியுடன் வலம் வந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலை மாலை வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான இன்று ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது.

இந்த திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேவி, பூதேவி சமேதராய்  வைத்திய வீரராகவப் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு 4 மாட வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதன்பின்னர் தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி வேண்டுதலை நிறைவேற்றினர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்படி, போலீஸ் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையில், நகர இன்ஸ்பெக்டர் பத்ம  பபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 4 மாட  வீதிகளிலும் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். தேர் திருவிழாவில் சப் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, வட்டாட்சியர் என்.மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பாளர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: