×

ஆவடி காவலர் பயிற்சி மைதானத்தில் ரயில்வே பணிக்கான உடல் தகுதி தேர்வு நிறைவு: 1941 பெண்கள் பங்கேற்பு

ஆவடி: ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை பயிற்சி மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான இன்று 13 கர்ப்பிணிகள் உள்பட 1941 பெண்கள் பங்கேற்று, தங்களின் உடல்திறனை வெளிப்படுத்தினர். ஒன்றிய ரயில்வே வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு குரூப்-டி பிரிவில் கேங்மேன், ஹெல்பர், எலக்ட்ரிகல், பிட்டர், பெயின்டர் உள்ளிட்ட சுமார் ஒரு லட் சம் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் விண்ணப்பித்தனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கினால் ரயில்வே பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் என 2 மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்-பெண்களுக்கு கடந்த சில நாட்களாக ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதானத்தில் ரயில்வே பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த 4 நாட்களாக ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதற்கிடையே எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமணமாகி, தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவலர் பயிற்சி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக ரயில்வே பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் தமிழகம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து 13 கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, நிறைவு நாளான இன்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 13 கர்ப்பிணிகள் உள்பட 1941 பெண்கள் பங்கேற்று, தங்களின் உடல்திறனை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு ஒரு கிமீ ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் மணல் மூட்டையுடன் ஓடும் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Avadi Guards Training Ground , Completion of Physical Fitness Test for Railway Work at Avadi Guards Training Ground: 1941 Participation of Women
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...