மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு..!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார். கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு கேட்டார். மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கேட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சுமார் 10,000 வாக்குகள் பெற்றது.

தேர்தல் பிரச்சாரம்: கமலுக்கு ஈ.வி.கே.எஸ். அழைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். தெரிவித்துள்ளார். காங்கிரசையும், கமல்ஹாசனையும் பிரிக்க முடியாது. கமல்ஹாசன் கைகொடுப்பது மட்டுமல்ல கைக்கும் ஆதரவு தருவார் என்று நம்புகிறேன். இடைத்தேர்தலில் கமல் ஆதரவளித்தால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தொடக்கமாக அமையும். கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 11,000 வாக்குகள் பெற்றார். கட்சியினருடன் ஆலோசித்த பின் தனது முடிவை கூறுவதாக கமல் என்னிடம் கூறினார்  என ஈ.வி.கே.எஸ். தெரிவித்தார். அதிமுக இரண்டாக உடையவில்லை; நான்காக உடைந்திருக்கிறது எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்தார்.

செயற்குழுவில் ஆலோசித்து முடிவு: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் கலந்து ஆலோசித்து காங்கிரசுக்கு ஆதரவா? என்று தெரிவிப்போம் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது குறித்து செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நான் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது, நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுவரை எந்த நிலைப்பாட்டையும் நாங்கள் எடுக்கவில்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Related Stories: