×

கோபி அருகே அதிகாலை பயங்கரம்: மோடி பாசறை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை

கோபி: கோபி அருகே இன்று அதிகாலை மோடி பாசறை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும் விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாக குழுவில் நிர்வாகியாக உள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சண்முகத்திற்கும் அய்யம்மாளுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபத்தில் கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மகன்கள் விக்னேஷ், அடல் பிகாரி வாஜ்பாயுடன் அய்யம்மாள் சென்று விட்டார். இதனால் வீட்டில் சண்முகம் அவரது மகன் ராஜேஸ், தாயார் சிவம்மாள் (69), அண்ணன் கருப்புசாமி (50) ஆகியோர் மட்டும் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புள்ள பகுதியில் சண்முகம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டுள்ளது. படுக்கையில் இருந்து எழுந்து பார்த்தார். வௌிப்பகுதியில் தீப்பற்றி எரிவது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வீட்டிற்குள் பார்த்த போது குளிர்பான பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியில் தீ வைக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. வீசிய வேகத்திலும், தரையில் விழுந்ததாலும் தீ அணைந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சண்முகம் அளித்த தகவலின் பேரில் கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு எரியாமல் கிடந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நீலகண்டன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகம் மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gobi ,Modi Pasara , Early morning terror near Gobi: Petrol bomb hurled at Modi Pasara administrator's house: Police intensive investigation
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...