இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அரக்கோணம்: இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாக அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மங்களலட்சுமி சமேத அழகுராஜபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சோழர் காலத்திற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்டு சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் சிதிலமடைந்த கோயிலை ரூ.4 கோடி மதிப்பீட்டில் உபயதாரர்கள் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று கோயில் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டினர். இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக திருமலை திருப்பதி பெரியகோயில் கேள்வி அப்பன் ஸ்ரீசடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த 1,000 ஏக்கர் நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது. நெமிலி அருகே நடந்த கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும். நன்கு ஆராய்ந்த பிறகே திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்படும்’ என்றார்.

Related Stories: