×

நெல்லையில் குலசாமியாக மாறிய பாண்டியனின் கல்வெட்டு-வட்டெழுத்துகளில் கிராமசபை உறுப்பினர்கள் தேர்வு குறித்து தகவல்கள்

நெல்லை :  மானூரில் பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் தற்போது குலசாமியாக மாற்றப்பட்டு, இறைவழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அங்கு காணப்படும் வட்டெழுத்துக்களில் கிராமசபை உறுப்பினர்கள் தேர்வு பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.நெல்லை மாவட்டத்தில் முற்கால பாண்டியர்கள் மற்றும் பிற்கால பாண்டியர்கள் குறித்தான பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் காணப்படும் சில குகைகள் சமணர்கள் வாழ்ந்ததற்கான சாட்சிகளாக திகழ்கின்றன. திருவிதாங்கூர் தேவஸ்தான மன்னர்கள் குறித்தான கல்வெட்டுகளும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே தென்படுகின்றன. இந்நிலையில் பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டு மானூர் குலசாமியாக வழிபாடு நடத்தப்பட்டு வருவது இப்போது தெரியவந்துள்ளது.

நெல்லை அருகேயுள்ள மானூரில் அம்பலவாண சுவாமி கோயிலில் முற்கால பாண்டிய மன்னன் பராந்தக  நெடுஞ்சடையன் காலத்தில் வெட்டுவிக்கப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. இதில் ஊரின் பெயர் ‘களக்குடி நாட்டு மானநிலை நல்லூர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

இக்கல்வெட்டு பாண்டிய நாட்டு கிராமங்களின் நிர்வாக வாழ்க்கையினை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கல்வெட்டில் அந்த காலத்தில் கிராம சபை உறுப்பினர்கள் தேர்வு குறித்தான புதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது குறித்து கூறும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருரிலுள்ள பராந்தகச் சோழன் கல்வெட்டுக்கு, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இக்கல்வெட்டு கருதப்படுகிறது.

மானூர் கல்வெட்டில் காணப்படும் வாசகங்கள், ‘‘ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறசடையற்கு யாண்டு முப்பத்தைஞ்சு நாள் நானூற்றறு பத்து ஒன்பது (469). இந்நாளால் களக்குடி நாட்டு பிரம்மதேயம் மானநிலை நல்லூர் மகாசபையோம். பெருங்குறி சாற்றி ஸ்ரீ கோவர்தனத்து கூடியிருந்து இவ்வூர் மகாசபையோம் குடி மன்றாடுவ தனுக்கு செய்த ஸ்வஸ்தையாவது. இவ்வூர் பங்கு குடையார் மக்கள் சபையில் மன்றாடுகிறது. ஒரு தர்மம் உட்பட்ட மந்திர பிராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே, ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும் விலையும் பிரத்திக்கரமும் ஸ்ரீதனமுடையார் ஒரு தனம் உட்பட மந்திர பிராமணம் வல்லவராய் சுவ் ருத்ராய் இருப்பாரே மன்றாடுவதாகவும்,’’ என தொடங்கி ‘‘இப்பரிசு பணித்து வியவஸ்தை செய்தோம் மகா சபையோம்.’’ என்று கூறுகிறது.

இக்கல்வெட்டின்படி மானூர் கிராம சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவருக்கு, ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இருப்பார். கிராம சபை உறுப்பினராக போட்டியிடுவர் பிராமண மந்திரத்தை கற்றவராகவும், தர்மத்தை செய்கிறவராகவும் நல்ல நடத்தை உள்ளவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவர் கிராம சபையின் நிரந்தர  உறுப்பினராகவும், கூடுதல் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பார். மேலும் அவர் ஒரு சொத்தில் முழு உரிமை அல்லது பங்குதாரராகவும் இருப்பார். மரபு சார்ந்த செயல்களில் இருந்து பிராமண மந்திரத்தை தொடர்ந்து பின்பற்றுபவராகவும் இருப்பார். சொத்தில் ஒரு பங்கு அல்லது முழு பங்கினை பெற்றவரே தேர்தலில் போட்டியிட  தகுதியுடையவர்.

முழு வேதத்தையும் கற்றறிந்தவர் முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற தகுதி உடையவர். கிராம சபை உறுப்பினராக பங்கேற்கும் ஒருவர் ஊர் பற்றிய குழுவாதத்தில் பங்கேற்பவர் ஆகவும், இறுதி முடிவு எடுப்பவராகவும் இருக்க வேண்டும். (தற்போது இந்த முறை அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது).இந்த கிராம சபை குழுவில் பதவியை பெறுகிற ஒருவர் கிராம சபை துணைக் குழுக்களில்  உறுப்பினராக இருக்கக் கூடாது.

இவர்களது உறவினர்கள் யாரேனும் ஏற்கனவே கிராமசபை உறுப்பினராக இருந்தால், அவரும் தேர்தலில் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்த பொழுது கோயிலில் இருந்த பாண்டிய மன்னன் பராந்தக  நெடுஞ்சடையன் கல்வெட்டு ஆடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்த பொழுது தற்பொழுது இந்த கல்வெட்டு மானூர் சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாமல், தென்காசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலருக்கு குலசாமியாகவும் இருப்பது தெரிய வந்தது.

இதன் பின்னணி குறித்தான விசாரணையில், ‘கடந்த காலங்களில் பூஜை செய்து வந்த சிலர் குறிப்பிட்ட சில சாராரை இக்கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். எனவே அவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாததால் கோயிலின் வாசலில் இருக்கும் பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டினை வணங்கிச் சென்றனர். இதுவே கல்வெட்டை இறைவனாக கருதி வழிபடும் முறை இன்று வரை நடைமுறையில் இருப்பது தெரிய வந்தது.’ தற்போது கோயிலுக்குள் அனைவரும் சென்று வழிபடுவதோடு, சாமிக்கு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags : Gram Sabha ,Pandian ,Kulasami ,Nellai , Nellai: In Manoor, the inscriptions of the Pandya king have been converted into Kulasami and worship is being conducted. there
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்