×

தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நெல்லையில் சிறுமிகள் சிறு வீட்டு பொங்கலிட்டு கொண்டாட்டம்

நெல்லை : தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நெல்லையில் சிறுமிகள் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தை பொங்கல் பண்டிகையை தொடர்ந்து  அடுத்து  வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுகிழமைகளில் சிறுவீட்டு பொங்கலிட்டு  கொண்டாடப்படும்.  வீடுகளில் உள்ள 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பொங்கல்  பண்டிகையின்  பெருமையை அறிந்து கொள்வதற்காக குழந்தைகள் சேர்ந்து  பொங்கலிடும் இந்த  பண்டிகை சிறு வீட்டு பொங்கல் என அழைக்கப்படுகிறது.

இதற்காக மார்கழி மாதம் முழுவதும் பெண் பிள்ளைகள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து கோலத்தின் நடுவில் சாண உருண்டைகளை வைத்து அதில் செம்பருத்தி, பூசணி, எருக்கை, இதில் ஏதேனும் ஒரு பூவை நட்டு வைப்பார்கள். அந்த உருண்டைகளை தினமும் மாலை சேகரித்து, அதை பூவுடன் சேர்த்து வறட்டியாக தட்டி வீட்டின் முற்றத்தில் காயவைப்பார்கள். மார்கழி மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமையன்று நவதானியங்களைத் தண்ணீரில் ஊறவைத்து ஒரு துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.

தை மாதத்தில் வீட்டு முற்றத்தில் களிமண்ணால் சிறிய வீட்டை, பெண் குழந்தைகள் கட்டுவார்கள். அந்த வீட்டில் வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அவருக்கு பூ, தேங்காய், பழம் படைப்பார்கள். களிமண் வீட்டில் சிறிய அடுப்பு, பாத்திரம் ஒன்றை வைத்து அதில் பால் காய்ச்சி அந்த வீட்டை தனதாக்கிக் கொள்வார்கள். பால் பொங்கி வழிந்ததும், கிழக்கே பார்த்து, வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல் இடுவார்கள். முறத்தில் வாழை இலை விரித்து அந்த இலையில் மஞ்சளால் ஆன பிள்ளையார், முளைகட்ட வைத்த நவதானியங்கள், மாதம் முழுவதும் சேகரித்த சாணக் குப்பிகள், தேங்காய், பழம், வைத்து விளக்கேற்றி, ஒரு வீதியில் இருக்கும் சிறுமிகள் ஒன்றாக இணைந்து, ``வாடாமல், வதங்காமல் வளர்த்தேனடி குப்பி, நீ பரணி ஆத்து தண்ணியில போறியேடி குப்பி\\” என்று கும்மியடித்து வழிபடுவார்கள்.

பிறகு ஊரில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று சாணக் குப்பிகளை முதலில் தண்ணீரில் கரைத்து விடுவார்கள். அதன் பின் இலையை அப்படியே தண்ணீரல் விட்டு இறைவனுக்கு நன்றி சொல்லித் திரும்புவார்கள். இப்போது ஆற்றங்கரையில் தண்ணீர் இல்லாததால் குளம், ஏரிக்கரை என நீர் உள்ள பகுதிகளில் கரைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் செய்தால் அந்தப் பெண் குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது ஐதிகம்கடந்த  ஞாயிற்று கிழமை 15ம்தேதி தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதைத்தொடர்ந்து  அடுத்து வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே நெல்லை,  தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வீடுகளில் சிறுவர்,  சிறுமிகள் புத்தாடை அணிந்து பொங்கலிட்டு வழிபட்டனர். தைப்பொங்கல்  நாளில் பொங்கலிடுவது போன்றே கரும்பு, மஞ்சள் குலைகளை விளக்கு முன் வைத்து  வீட்டு வாசலில் பொங்கலிட்டனர். பின்னர் கோலத்தில் வைக்கப்பட்டிருந்த  பிள்ளையார் பூக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகள்  மற்றும் தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.

Tags : Thai Pongal festival ,Pongalittu ,Nellai , Nellai: Following the Thai Pongal festival, the girls in Nellai enjoyed celebrating Pongal at home. Nellai, Tenkasi,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!