×

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியது

பழனி: திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டையை காண்பித்து நுழைவுசீட்டை வாங்கி செல்கின்றனர். 27-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் நாளை வரை அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.

உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018-ம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜனவரி 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ம் தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது.

பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26-ம் தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 27-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் நாளை வரை அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.



Tags : Kudamuzuk ,Palani Murugan Temple , The process of issuing entry tickets to devotees on the occasion of Kudamuzuk at Palani Murugan Temple has started
× RELATED கோயிலில் உழவார பணி