பதற்றமான தொகுதி கண்டறியப்பட்ட பிறகு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்: ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

ஈரோடு: பதற்றமான தொகுதி கண்டறியப்பட்ட பிறகு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது. தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையில் நடத்திட போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 10 சதவீதம் ஒப்படைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ரூ.10,000க்கு மேற்பட்ட மதிப்புடைய மது பானங்கள், பரிசு பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை நடத்தினார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை நடந்து வருகிறது. பின்னர், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான தொகுதி கண்டறியப்பட்ட பிறகு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது என்று கூறினார்.

Related Stories: