×

போக்குவரத்து விதி மீறிய ரோந்து வாகனத்துக்கு அபராதம்: டிவிட்டர் புகாரில் அதிரடி நடவடிக்கை

சென்னை: தேனாம்பேட்டை பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வடபழனி காவல் நிலைய ரோந்து வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் போலீசாரே ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது, எதிர் திசையில் செல்வது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது என போக்குவரத்து விதிகளை மீறுவதாக புகார்கள் வருவதால், இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடபழனி காவல் நிலைய ரோந்து வாகனம் நேற்று காலை 8.40 மணிக்கு, தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டல் அருகில் சென்றபோது, வலதுபுறம் திரும்ப போக்குவரத்து போலீசாரால் தடை செய்து அதற்கான அறிவுப்பு பலகை வைத்திருந்தும், அதை மீறி ரோந்து வாகனம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சென்றுள்ளது.இதை, பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர், செல்போனில் படம் எடுத்து, அதை டிவிட்டரில் வடபழனி ரோந்து வாகனத்தின் புகைப்படத்துடன் ‘காவல்துறை நடவடிக்கை எடுக்குமா’ என்று பதிவு செய்து இருந்தார்.

இதை கவனித்த மாநகர போக்குவரத்து உயரதிகாரிகள், உடனே, நுங்கம்பாக்கம் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அருண், போக்குவரத்து விதிகளை மீறிய வடபழனி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுனர் காவலர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்தனர். அதன்படி, போலீஸ் ரோந்து வாகன ஓட்டுனர் ஸ்ரீதர் தனது சொந்த பணத்தில் அபராத தொகையை செலுத்தினார்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று உணர்த்தும் வகையில் விதிகளை மீறிய போலீஸ் ரோந்து வாகனம் ஓட்டிய போலீஸ்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் தங்களது டிவிட்டர் பதிவில் போக்குவரத்து விதியை மீறிய போலீஸ் ரோந்து வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு வழி சாலையில் சென்ற பெண் கூடுதல் டிஜிபி ஒருவரின் காருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




Tags : Twitter , Traffic rule, Violating patrol vehicle, Fine, Twitter complaint, Action taken
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு