மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ.3 லட்சம் திருடிய ஒடிசா கொள்ளையன் கைது: திருப்பதியில் சுற்றிவளைப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள், ரூ.3 லட்சத்தை திருடிய ஒடிசா கொள்ளையனை போலீசார் திருப்பதியில் சுற்றிவளைத்து கைது செய்தனர். புளியந்தோப்பு போலு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சாந்தா (69). இவரது கணவர் சங்கரன், மீனம்பாக்கம் பின்னி மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 4 வருடங்களுக்கு முன் கணவர் இறந்த நிலையில், சாந்தா தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சாந்தாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வசித்து வந்த 8 பேர், வீடு மிகவும் பழுதாகி விட்டதாக கூறி, சில வருடங்களுக்கு முன்பு அனைவரும் காலி செய்து விட்டனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பூரில் உள்ள 4வது மகன் வீட்டிற்கு சென்ற சாந்தா, அங்கேயே தங்கி இருந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர், சாந்தாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் உள்ளிட்டோர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், வடமாநில வாலிபர் ஒருவர் சாந்தா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அந்த புகைப்படத்தை வைத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அந்த நபர் மின்ட் தெரு பகுதியில் வசிப்பது தெரிந்தது. அங்கு சென்றபோது, அவர் மாயமானது தெரிந்தது. தீவிர விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோவிந்த் (எ) காக்கடா (38) என்பதும், சென்னை பூக்கடை பகுதியில் கூலி வேலை செய்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன், வேலை செய்த இடத்தில் ரூ.10 ஆயிரத்தை திருடிய வழக்கில் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சில காலம் சொந்த ஊருக்கு சென்று விட்டு, மீண்டும் சென்னை வந்து, புளியந்தோப்பு பகுதியில் வேலை தேடுவது போல் நடித்து, சாந்தா வீட்டில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை பிடிக்க, புளியந்தோப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துசெல்வம், உதவி ஆய்வாளர் முரளி, கருப்பையா உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, திருப்பதியில் இருப்பது தெரிந்தது. உடனே, போலீசார் விரைந்து சென்று, அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 20 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: