சென்னை புறநகர் பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை குவியல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூந்தமல்லி: சாலையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய்கள் பரவுகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல், நசரத்பேட்டை, வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோரங்கள், நீர்நிலைகள், ஆற்றங்கரையோரங்கள் குப்பைகள் கொட்டும் இடங்களாக மாறிவருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பொறுப்பற்ற முறையில் கண்டபடி கொட்டப்படுகின்றது.

சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறுவிதமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.புறநகர் பகுதிகளில் விரிவடைந்து வரும் குடியிருப்பு பகுதிகள், மக்கள் தொகை பெருக்கம், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் வந்து குடியேறும் மக்கள் போன்ற காரணங்களால் குப்பைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவற்றை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன என்பதே உண்மை.

குப்பைகளை சேகரிப்பது, அவற்ற தரம் பிரிப்பது, பின்னர் அதற்குரிய பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது என இதற்கான பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமையாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஊராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை, நிதிச்சுமை, போன்றவற்றால் உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி சேகரிக்கப்படும் குப்பைகளை கையாளுவதில் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக வெற்றி பெறுவதில்லை. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், தாம்பரம் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை பகுதிகளான வானகரம், காரம்பாக்கம், பரணிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.

அதேபோல் மதுரவாயல், திருவேற்காடு, சென்னீர்குப்பம் பகுதிகளில் கூவம் ஆற்றங்கரையோரமும் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. வண்டலூர்  மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம் சர்வீஸ் சாலை பகுதிகளான பூந்தமல்லி, மலையம்பாக்கம், நசரத்பேட்டை போன்ற பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கிறது. பாரிவாக்கம் ஏரி, வரதராஜபுரம் ஏரி, போன்ற புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள், குட்டைகள் குப்பை கொட்டும் இடங்களாக மாறியுள்ளன.

இப்படி கொட்டப்படும் குப்பைகளால் அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளில் கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவைகளுக்குள் ஏற்படும் சண்டையால் சாலைகளில் திடீரென ஓடி வருகின்றன. இதனால், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. அவ்வாறு கொட்டும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகைசூழ்ந்து சுவாச பிரச்னைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

Related Stories: