நீதிமன்ற உத்தரவின்படி இஸ்ரேல் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்

டெல் அவிவ்,: இஸ்ரேலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உள்துறை அமைச்சரை பிரதமர் நேதன்யாகு பதவி நீக்கம் செய்தார்.இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து அரசியல்வாதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பான சர்ச்சை உருவாகி உள்ளது. இதனால் நாட்டின் ஜனநாயக அடிப்படைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் கடந்தாண்டு குற்றம் சாட்டப்பட்டிருந்த, நேதன்யாகுவின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஆர்யே டெரி அமைச்சராக தொடர்ந்து பதவியில் நீடிக்க கூடாது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றி வந்த டெரியை பதவி நீக்கம் செய்து பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டார்.

இதையடுத்து டெரியின் ஷாஸ் கட்சி உறுப்பினர்கள் கூட்டணி அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர். இதனால், கூட்டணி அரசில் 3வது பெரிய கட்சியான ஷாஸ் கட்சியை சேர்ந்த வேறு ஒருவரோ அல்லது டெரியே மீண்டும் அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: