×

கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல் விலை எப்போது குறையும்?: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

வாரணாசி,: ‘பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டவுடன் பெட்ரோல் விலை குறைக்கப்படும்’ என ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறி உள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் நீடிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116.01 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த மாதம் 82 டாலராக சரிந்துள்ளது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பதிலளித்த ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அந்த சுமை நுகர்வோருக்கு கொடுக்காமல் இருக்க எண்ணெய் நிறுவனங்களே பொறுப்புடன் செயல்பட்டுள்ளன.

அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஒரே மாதிரி வைத்திருக்க அரசு உத்தரவிடவில்லை. அவர்கள் தாங்களாகவே அதை செய்தனர். பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகளை ஈடுகட்டிய பிறகு பெட்ரோல் விலை குறையும் என நம்புகிறேன். ’’ என கூறி உள்ளார். அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த ஏற்றத் தாழ்வுடன் உள்ளன. கொரோனாவால் 2020ல் கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில், கொரோனாவுக்குப் பிறகு 2022ல் கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக உக்ரைன், ரஷ்யா போருக்குப் பிறகு மார்ச்சில் உச்சபட்சமாக 140 டாலராக கச்சா எண்ணெய் விலை எகிறியது. இதனால், பொருளாதார மீட்சியை கருத்தில் கொண்டு கடந்த 15 மாதமாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படவில்லை என பொதுத்துறை நிறுவனங்கள் கூறுகின்றன.

அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால், விலை உயர்வு சுமையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் கால கட்டத்தில் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.21,201.18 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், அதன் பலன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் நஷ்டத்தை ஈடுகட்டி வருவதாக அரசு கூறுகிறது.



Tags : Union minister , Crude Oil, Petrol Price, Union Minister, Explanation
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...