மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி முயற்சி: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

போபால்: ‘மக்களிடையே  வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம்  சிங்ரோலியில் நேற்று நடந்த அரசு விழாவில்  பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,‘‘ இந்தியா பிரிந்து போகிறதா? ஏற்கனவே கடந்த 1947ம் ஆண்டில் நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், அப்போது இருந்த தலைவர்கள் யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. ஆனால், தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடு முழுவதும்  வெறுப்புணர்வு ஏற்பட்டு உள்ளதாக கூறி வருகிறார்.  

மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி  அவர் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க முடியாது. மக்களின் நம்பிக்கை மற்றும் அன்பை பெற்றால் மட்டுமே இதனை சாதிக்க முடியும். உலகின் நன்மதிப்பை நம் நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் வெறுப்பு  இருப்பதாக  கூறி சர்வதேச அளவில் இந்தியாவை அவமதிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை பற்றி பேசி வெறுப்பை  ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் மக்களிடத்திலே சென்று மோடிக்கும், பாஜவுக்கும் எதிராக வெறுப்பை உருவாக்குகிறீர்கள். இதை பற்றி பேசி  உலக அரங்கில்  இந்தியாவின் மதிப்பை கெடுக்க வேண்டாம் என்று  கேட்டு கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: