×

நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் மீது ஓய்வு பெற்ற நீதிபதி விமர்சனம்: ஆடியோவை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தால் சட்டங்களை உருவாக்க முடியாது என்று ஓய்வு பெற்ற  நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான ஆடியோவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியத்தின் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை. எனவே, கொலீஜியத்தில் ஒன்றிய அரசு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  கிரண் ரிஜிஜூ டிவிட்டரில் பதிவிடுகையில்,தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம்  மக்கள் நாட்டை ஆளுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நலனுக்கான சட்டங்களை உருவாக்குகிறார்கள். நம் நாட்டின் நீதித்துறை சுதந்திரமானது. அரசியல் சட்டமே பிரதானமானது. பெரும்பாலான மக்கள் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் தாங்கள் அரசியல் சட்டத்தை விட மேலானவர்கள் என்று நினைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி இந்தியில் பேட்டியளிக்கும் ஆடியோ ஒன்றையும் ரிஜிஜூ டிவிட்டரில் இணைத்துள்ளார்.

அதில், சோதி கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றத்தால்  சட்டங்களை உருவாக்க முடியாது. அதற்கான உரிமை உச்சநீதிமன்றத்துக்கு கிடையாது. சட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. உங்களால் அரசியல் சட்டத்தை திருத்த முடியுமா? நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டங்களை திருத்த முடியும். முதல் முறையாக அரசியல் சட்டத்தை  உச்ச நீதிமன்றம் கடத்தி விட்டதாக நான் நினைக்கிறேன். அரசியல் சட்டத்தை கடத்திய பின்னர்  நாங்களே நீதிபதிகளை நியமிப்போம். அதில் ஒன்றிய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என அவர்கள் கூறுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Union Minister , Appointment of Judges: Retired judge reviews Supreme Court: Union Minister releases audio
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு