இருமொழிக்கொள்கைதான் வேண்டும் மாநிலங்களே கல்விக்கொள்கை தயாரிப்பதுதான் சிறப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி

காரைக்குடி: ‘இருமொழிக்கொள்கைதான் வேண்டும். மாநிலங்களுக்கான கல்விக்கொள்கையை அந்தந்த மாநிலங்களே தயாரிப்பதுதான் சிறப்பாக இருக்கும்’ என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி காரைக்குடியில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அமைச்சர் தாய்மொழி குறித்து பேசியுள்ளார். அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். மும்மொழி கொள்கையாக இருக்கக்கூடாது, இருமொழி கொள்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிவித்துள்ளார். அதில் மும்மொழி கொள்கை குறித்து மிக அதிகமாக கூறியுள்ளனர்.

புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத் தேர்வு குறித்து அதிகமாக பேசாமல் தாய்மொழியை மட்டும் பேசியுள்ளார். வெளிநாட்டு மொழிகளில் உலக மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தை படிக்க வேண்டும் என்பதுதான் அண்ணா காலத்தில் இருந்து நமது மாநிலத்தில் உள்ள இருமொழி கொள்கை. எனவே புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாம் எடுத்துக்கொள்வோம். அதற்காகத்தான் அதையெல்லாம் ஆய்வு செய்து தமிழ்நாட்டின் கொள்கைகள் பாதிக்கப்படாமல் அதனையும் சேர்ந்து செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கல்விக்கொள்கையை உருவாக்கியுள்ளார்.

நிச்சயம் தமிழ்நாடு கல்விக்கொள்கை எல்லா கொள்கைகளையும் உள்ளடக்கி, உலக அளவில் தமிழ்நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆரம்பக்கல்வி மிகச்சிறந்ததாக இருக்கும் நிலையை உருவாக்கும். அவர்களது கொள்கைப்படி 3, 5, 8ம் வகுப்புகளுக்கு எல்லாம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதன்மூலம் கல்வியில் இடைநிற்றல் அதிகளவில் வரும். உயர்கல்வியில் கல்லூரியில் பிஏ, பி.எஸ்சி சேரவும் நுழைவுத்தேர்வு என கூறுகின்றனர். எனவே தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிலேயே ஒரு குழு அமைத்து அதன் மூலம் ஒரு அறிக்கையையும் ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.

ஒன்றிய கல்வி அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் பேசிய போது தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தி பேசியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்களில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இல்லை. சிபிஎஸ்இ படிப்பில் தமிழ் மொழி இல்லாத நிலை உள்ளது. இதன் அடிப்படையில் மாநில மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வருங்காலங்களில் கொடுத்தால் வரவேற்க கூடியது. அந்தந்த மாநிலங்களுக்கு உரிய கல்விக்கொள்கையை அந்தந்த மாநிலங்களே தயாரித்துக்கொள்வது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

* உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடம்

அமைச்சர் பொன்முடி கூறுகையில், ஒன்றிய கல்வி அமைச்சர், அகில இந்திய  அளவில் உயர்கல்வியின் சதவீதம் 25 எனவும் அதனை 50 ஆக உயர்த்துவதுதான்  நோக்கம் எனவும் கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் முன்பே 51 சதவீதமாக  உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் இடத்தில் உள்ளது  தமிழ்நாடு தான். இதனை மேலும் அதிகரிப்போம் என்றார்.

Related Stories: