பழநி கோயில் கும்பாபிஷேகத்துக்காக சண்முக நதியில் இருந்து தீர்த்தம்

பழநி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தற்போது, முழுவீச்சில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கியது. முருகன் வேள்வி வழிபாடு, 6 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு வேள்வி, 16 ஆதிசைவ மறையோர் வழிபாடு, நிறைஅவி, திருவொளி வழிபாடு, கந்தபுராணம், திருமுறை, திருப்புகழ் விண்ணப்பம், திருவமுது வழங்கல் நிகழ்ச்சிகள் நேற்று  நடந்தது.

இதைத்தொடர்ந்து சண்முக நதி ஆற்றில் இருந்து பழநி கோயிலின் 108 அர்ச்சக ஸ்தானீகர்கள் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பழநி கோயில் பிரதான ஆச்சாரியர் அமிர்தலிங்கம், உப சர்வசாதகர் செல்வசுப்பிரமணியம், கும்பேஸ்வரர், மணி உள்ளிட்ட சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசமர வழிபாடு, நிலமகள் வழிபாடு, பூமி வழிபாடு, புனித மண் எடுத்து ஆலயம் வலம் வருதல், ஏழுகடல் வழிபாடு, நெல்மணி, நிறைகுட வழிபாடு, மண் எடுக்கும் கருவி வழிபாடு போன்றவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: