×

ஜல்லிக்கட்டை பார்த்தபோது காளை முட்டி இறந்த மாணவன் சடலத்தை வாங்க மறுப்பு: உறவினர்கள் போராட்டம்

தர்மபுரி: தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இறந்த மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி தெருவை சேர்ந்த சீனிவாசனின் 2வது மகன் கோகுல்(14). அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், தடங்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க, உறவினருடன் சென்ற கோகுல், காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கோகுலின் பெற்றோர் விருப்பத்தின் பேரில், அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்காததால் தான், தனது மகன் உயிரிழக்க நேரிட்டது என புகார் தெரிவித்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கேபி.அன்பழகன், கோவிந்தசாமி, பாமக எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அவர்களிடம், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், சுமுக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாணவன் பெற்றோரிடம் ரூ.4லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதையடுத்து மதியம் 2 மணிக்கு, மாணவன் சடலத்தை உறவினர்கள் வாங்கி சென்றனர்.



Tags : Bull, Dead student, Corpse, Refusal to buy, Kinship struggle
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது