மாலுமி, தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர்வதற்கு 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு: கடலோர பாதுகாப்பு குழுமம் ஏற்பாடு

தூத்துக்குடி: மாலுமி, தேசிய பாதுகாப்பு பணிகளில் சேருவதற்கு ஏதுவாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மரைன் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு கடந்த ஆண்டு மார்ச் 14 முதல் தொடர்ந்து ஜூன் 14ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து 2வது அணிக்கு 90 நாட்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு இவ்வாண்டில் வரும் பிப்ரவரி மாத பிற்பகுதியில் துவக்கப்படவுள்ளது. அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்பட உள்ள இந்த 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ அலுவலகங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும் ஆய்வாளர் நியாயவிலைக் கடைகள் கிராம கூட்டுறவு சங்கங்கள், ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாதம் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும். எனவே, பிளஸ் 2 தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: