×

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு 46வது சென்னை புத்தக காட்சியில் ரூ.16 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை: 15 லட்சம் வாசகர்கள் வருகை

சென்னை: சென்னையில் கடந்த 17 நாட்களாக நடைபெற்ற 46வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. ரூ.16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனையானது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர்.  கடைசி நாளிலும் புத்தகங்கள் வாங்க வாசகர்கள் குவிந்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில்  ஆண்தோறும் சென்னையில் புத்தக காட்சி நடப்படுகிறது. 46வது சென்னை புத்தகக்  காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜன.6ம் தேதி தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சென்னை புத்தக காட்சியில் மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு வெளிநாடுகளை சேர்ந்த பதிப்பகங்களின் நூல்கள், இலங்கை தமிழ்  எழுத்தாளர்களின் புத்தகங்கள், புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின்  புத்தகங்கள் இடம் பெற்றது. சிறிய பதிப்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக மினி ரேக் சிஸ்டம் முறையும் இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. சிறுவர்களுக்கு என பிரத்யேகமாக அரங்குகளும் அமைக்கப்பட்டது. அதில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். மேலும், இந்த ஆண்டு சிறைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கம் அதிக கவனத்தை ஈர்த்தது. இதில், சிறை கைதிகளுக்கு புத்தகங்களை விலையில்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு பல வாசகர்களை கவர்ந்தது. இதில் மருத்துவம், சிறுகதைகள், சமையல், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து தலைப்புகளிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதை வாசகர்கள் விரும்பி வாங்கி சென்றனர்.     சென்னையில், கடந்த 17 நாட்களாக நடைபெற்ற  46வது சென்னை புத்தக காட்சியில் ரூ.16 கோடிக்கும்  மேல் புத்தகங்கள் விற்பனையானதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை  தந்தனர்.

மேலும், இந்தியாவில் முதல் முறையாக  தமிழக அரசு சார்பில் ஜன.16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது.  பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இஸ்ரேல், உகாண்டா, அர்மேனியா அர்ஜென்டினா, கனடா, துருக்கி, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 30 வெளிநாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 365 நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கண்காட்சியில் கையெழுத்து ஆனது.

* சிறை கைதிகளுக்கு 35,000 புத்தகங்கள் நன்கொடை
46வது புத்தக காட்சியில், முதன் முறையாக சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளுக்காக ‘புத்தக தானம்’ அரங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் புத்தக காட்சிக்கு வந்தோர், தங்களிடம் உள்ள புத்தகங்களை சிறை கைதிகளுக்கு இலவசமாக வழங்கினர். அந்த வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பதிப்பாளர்கள் என அனைவரும் தங்களிடம் இருந்த புத்தகங்களை வழங்கினர். அதன்படி கடந்த 17 நாட்களாக நடந்த புத்தகக் காட்சியில் சிறைத்துறை அரங்கில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Book Scene , Over Rs 16 Crore Books Sold at 46th Chennai Book Fair, 17 Days of Book Festival: 15 Lakh Readers Visited
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...