×

மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்: வேட்பாளர் குறித்து இன்று முக்கிய முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்க ஓபிஎஸ் நேற்று திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மோடிக்கு நெருங்கிய தொழிலதிபர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். விஐபி அல்லது ெமஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் தனித்தனியாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர். இரு தரப்பும் பாஜ தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை அவரவர் அலுவலகத்தில் சந்தித்து இடைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

அதில் ஒருபடி மேலே சென்ற ஓபிஎஸ், பாஜ இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்க தயார் என்ற எடப்பாடிக்கு எதிரான வெடிகுண்டை போட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால், இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா அல்லது அதிமுக அணிகளில் ஓபிஎஸ், இபிஎஸ்சில் யாருக்கு ஆதரவு தருவது என்று முடிவு எடுக்க தெரியாமல் பாஜ திணறி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓபிஎஸ் நேற்று காலை திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு குஜராத் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை முடித்து விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி பாஜ தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருக்கமான அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களை அவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போதும் இடைத்தேர்தலில் எனக்கு ஆதரவு கொடுங்கள்.

இல்லாவிட்டால் பாஜ நிற்கட்டும். அதற்கு ஆதரவை அளிப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் ஏற்பாட்டில் நடந்தது. அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்க எடப்பாடி அணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஓபிஎஸ் குஜராத் சென்றார். இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவும் கேட்டார். இன்று மதியம் 2 மணிக்கு ஓபிஎஸ் சென்னை திரும்புகிறார். இன்று மாலை ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் வேட்பாளர் தொடர்பாக முக்கிய அறிவிப்பை ெவளியிட திட்டமிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை 15 சதவீதம் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களும், 10 சதவீதம் கவுண்டர்கள், 15 சதவீதம்  அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் 30 சதவீதம், நாயக்கர் 5 சதவீதம், வன்னியர்  5 சதவீதம் பேரும் உள்ளனர். மெஜாரிட்டியாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் மட்டும் எடப்பாடி சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், இந்த 10 சதவீதத்தையும், இரட்ைட இலை சின்னத்தையும், பணத்தையும் நம்பி தான் எடப்பாடி தேர்தலில் நிற்கிறார். இதனால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் 15 சதவீதம் உள்ள முதலியார் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். முதலியார் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் ஓபிஎஸ் அணியில் உள்ளார். அவரை நிறுத்த ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இன்னொரு தரப்பினர் ஒரு விஐபியை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். விஐபியை நிறுத்தினால் பலத்தை காட்டலாம் என்று நினைக்கின்றனர். அதே நேரத்தில் எடப்பாடியை விட அதிக ஓட்டுக்களை வாங்கலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கையால் எடப்பாடி  கடும் கலக்கத்தில் இருந்து வருகிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்க எடப்பாடி தனது பலத்தை காட்டி வருகிறார். ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் அந்த வாய்ப்பும் பறி போய் விடுமோ? என்று எடப்பாடி அணியினர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

Tags : OPS ,Gujarat ,Modi , OPS surprise trip to Gujarat to meet Modi's close friends: Major decision on candidate today
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்