இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை: அமெரிக்காவில் கொள்ளையர்கள் அட்டகாசம்

நியூயார்க்: அமெரிக்காவின் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஒருவர், முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதி பெட்ரோல் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பட்ரோ சிபோராம் (67) என்பவர் இரவு நேர ஷிப்டில் பணியாற்றி வந்தார். கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அவர், தொடர்ந்து அந்த பங்கில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பெட்ேரால் நிலையத்திற்கு கொள்ளையடிக்க வந்த 3 முகமூடி கொள்ளையர்கள், பணியில் இருந்த பட்ரோவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தகவலறிந்த போலீசார், பெட்ரோவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேக நபர்களின் புகைபடங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 20 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த செப்டம்பரில், மிசிசிப்பியின் டுபெலோவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பரம்வீர் சிங் என்ற இந்திய வம்சாவளி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: