சென்னை ஐஐடி வளாகத்தில் பைக் மீது குரங்குகள் மோதியதில் பேராசிரியருக்கு எலும்பு முறிவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் பைக் மீது குரங்குகள் மோதிய விபத்தில் உதவி பேராசிரியர் ஒருவர் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் உதவி பேராசிரியராக சிவக்குமார்(47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் பணி முடிந்து தனது பைக்கில் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். வழக்கமாக சென்னை ஐஐடியில் மான்கள் மற்றும் குரங்குகள் அதிகளவில் காணப்படும். உதவி பேராசிரியர் சிவக்குமார் தனது பைக்கில் செல்லும் போது, குரங்குகள் கூட்டம் ஒன்று அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது உதவி பேராசிரியர் வந்த பைக் மீது குரங்குகள் மோதியது. அப்போது திடீரென சிவக்குமார் பைக்கின் பிரேக்கை பிடித்தார். ஆனால் வேகத்தின் காரணமாக பைக் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் உதவி பேராசிரியர் சிவக்குமாருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு துடித்தார். அதை பார்த்த மாணவர்கள் உதவி பேராசிரியரை மீட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: