காதலை ஏற்க மறுத்ததால் ஜூனியர் வீராங்கனை மீது துப்பாக்கிச் சூடு: ம.பி-யில் 3 சிறுவர்கள் கைது

குவாலியர்: குவாலியரில் காதலை ஏற்க மறுத்ததற்காக ஜூனியர் வீராங்கனை மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த ஜூனியர் குத்துச்சண்டை வீராங்கனை (14) என்பவர், குவாலியரின் தருண் புஸ்கர் ஸ்டேடியத்தில் வழக்கம் போல் தினசரி பயிற்சியை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், வீராங்கனையை வழிமறித்தனர். அவர்களில் ஒருவன், வீராங்கனையை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கியின் தோட்டாக்கள் வீராங்கனையின் மீது பாயவில்லை. மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், பைக்கில் வந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரும் சிறுவர்கள் ஆவர். இவர்களில் ஒருவன், சிறுமி மீது காதல் கொண்டான். ஆனால் காதல் கோரிக்கையை அந்த சிறுமி ஏற்கவில்லை. அதனால் கோபமடைந்த அந்த சிறுவன், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அவர்களுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: