×

ஜம்முவில் நள்ளிரவு வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயம்: 24 மணி நேரத்தில் 3 சம்பவம் நடந்ததால் பதற்றம்

ஜம்மு: ஜம்முவில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயமடைந்தார். 24 மணி நேர இடைவெளியில் 3 வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நர்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் நேற்று காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நடந்தது. பழுது பார்ப்பதற்காக பணிமனைக்கு வந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த முதல் குண்டு காலை 10.45 மணியளவில் வெடித்தது. தொடர்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் பழுதடைந்த வாகன உதிரிபொருள்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2வது குண்டும் வெடித்தது.

முதல் குண்டுவெடிப்பில் 5 பேர் காயமடைந்த நிலையில் இரண்டாம் குண்டுவெடிப்பில் மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புலனாய்வு அமைப்புகளும், உள்ளூர் போலீசாரும் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்முவின் ஷித்ரா பகுதியில் நேற்று நள்ளிரவு மணல் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை போலீஸ் கான்ஸ்டபிள் சுரிந்தர் சிங் உள்ளிட்ட சில போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது திடீரென அந்த லாரியின் டேங்க் (இன்ஜினில் இருந்து மாசுகளை சுத்தம் செய்யும் டேங்க்) வெடித்து சிதறியதில், சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முதல் கடந்த 24 மணி நேர இடைவெளியில் 3 வெடிவிபத்துகள் சம்பவம் நடந்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Jammu , Policeman injured in lorry's tank burst during midnight vehicle check in Jammu: 3 incidents in 24 hours raise tension
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...