×

ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: மண்ணடியில் இன்று ஒருவர் கைது

தண்டையார்பேட்டை: மண்ணடியில் இன்று காலை ஒருவரிடம் ரூ.70 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரையும் ஹவாலா பணத்தையும் வருமானவரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை மண்ணடி, வடக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இன்று காலை 8 மணியளவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணடி, இந்தியன் வங்கி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமான போலீசார், அவரது பையை சோதனை செய்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சராபுதீன் (58) எனத் தெரியவந்தது. மேலும், இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். மேலும், இவர் ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று காலை வீட்டிலிருந்து பைக்கில் ரூ.70 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணத்தை எடுத்துக்கொண்டு, அப்பணத்தை வேறொருவரிடம் கொடுப்பதற்காக காத்திருந்தது தெரியவந்தது.
 
சராபுதீனை கைது செய்து, இந்த ஹவாலா பணம் யாருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார், இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்களிடம் போலீசார், சராபுதீன் மற்றும் ரூ.70 லட்சம் ஹவாலா பணத்தை வருமானவரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்கள் அலுவலகத்துக்கு சராபுதீனை வருமானவரி துறை அதிகாரிகள் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Manadi , Seizure of Rs 70 lakh hawala money: One person arrested in Manadi today
× RELATED வந்தே பாரத் ரயிலையும் அம்பானி பாரத்,...