வேங்கைவயல் வழக்கு விசாரணை சவாலானது: திருச்சி சரக டிஐஜி பேட்டி

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு விசாரணை சவாலானது என்று திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட வெள்ளனூர் காவல்  நிலையத்தில் திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர், சிபிசிஐடி எஸ்பி தில்லை  நடராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் டிஐஜி சரவணன்சுந்தர் அளித்த  பேட்டி: வேங்கைவயல் வழக்கில் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்துறையினருக்கு எந்தவிதமான புறஅழுத்தமும் இல்லை.

இன்னும் கூடுதலாக சிபிசிஐடி போலீசார்  விசாரிப்பார்கள். இது கண்டிப்பாக சவால் நிறைந்த வழக்கு தான். அறிவியல்  பூர்வமாகவும், சாட்சிகளின் அடிப்படையிலும் தான் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நடந்த விசாரணை, சிபிசிஐடி  போலீசாருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை அடிப்படையாக கொண்டு கூட அவர்கள்  விசாரணை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வேங்கைவயல் பகுதிக்கு சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன்  சென்று அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு  பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். வெள்ளனூர் காவல் நிலையத்திற்கும் சென்று போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: