ராமநாதபுரம் அருகே கள்ளநோட்டுகளுடன் ஊர்க்காவல்படை வீரர் கைது: புழக்கத்தில்விட்ட 2 பேர் சிக்கினர், அச்சிட்ட இயந்திரங்களும் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்: கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஊர்க்காவல்படை வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இயந்திரம், கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே அ.மணக்குடி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் இருப்பதாக திருப்பாலைக்குடி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளுடன், உப்பூர் அருகே மோர்ப்பண்ணையை சேர்ந்த சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான ராஜேஸ்வரனை (28) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ரவி (60) என்பவரிடம் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கியது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், ராஜேஸ்வரனை திருச்செங்கோடுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரவியை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், 500 மற்றும் 200 ரூபாய் தாள்கள் என ரூ.25 ஆயிரத்து 200 மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டுகள் அச்சடிக்க அவருக்கு உதவியாக இருந்த பூபாலன் (39) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ரவி, பூபாலன், ராஜேஸ்வரன் ஆகியோரை போலீசார் திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். மேலும், இந்த குற்றச்செயலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? அவர்கள் அச்சடித்த கள்ள நோட்டுகள் எந்த பகுதியில் புழக்கத்தில் விடப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: