×

பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மணிரத்னம் மீது வழக்கு

சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளார். தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும். வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் கூறியுள்ளார். மேலும் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : Maniratnam ,Ponny , Case against Mani Ratnam in connection with Ponni's Selvan movie
× RELATED பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்துக்கு உலக சாதனை சான்றிதழ்