மாவட்ட நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது. காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கீழமை நீதிமன்றத்தில் வழக்கை காலதாமதம் ஆக்குவதற்காக  தள்ளிவைக்க கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால், அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று காலம் தாமதம் ஆக்குவதால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட  நிலுவையில் இருப்பதாக சுட்டிகாட்டி உள்ளார். கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும், அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.

விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் ஆக்குவது தெரிய வந்தால் மட்டுமே  உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும். இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: