செய்தி நிறுவனங்களுடன் கூகுள், பேஸ்புக் வருவாயை பகிர வேண்டும்: ஒன்றிய அரசு செயலர் கோரிக்கை

புதுடெல்லி: ‘பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுடன் தங்கள் வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா வலியுறுத்தி உள்ளார். டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் மூலமாக தனது செய்தியை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: செய்தி துறையில், உண்மையிலேயே செய்திகளை உருவாக்கி வெளியிடுவது டிஜிட்டல் செய்தி தளங்கள்தான்.

அவர்களிடமிருந்து செய்திகளை தொகுத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (கூகுள், பேஸ்புக் போன்றவை) வெளியிடுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை பெரிய நிறுவனங்கள், டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகும். படைப்பாளர்களுக்கு நியாயமான பங்களிப்பை வழங்க வழி செய்வதற்காக சட்ட நடைமுறைகள் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனில் அமலில் உள்ளன.

கொரோனா பாதிப்புக்குப்பிறகு, டிஜிட்டல் செய்தித்துறை மட்டுமல்ல, அச்சுத்துறையும் நிதி ரீதியாக சிக்கலில் உள்ளது. இதுபோல நமது பாரம்பரியமான செய்தித்துறை தொடர்ந்து எதிர்மறையான தாக்கங்களை சந்தித்தால், நாட்டின் நான்காவது தூணான பத்திரிகையின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே தேசத்திற்கு சேவை செய்த வரலாற்றை கொண்டுள்ள செய்தித்துறை காக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: