×

குஜராத் கலவரம் பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை: டிவிட்டர் பகிர்வுகளும் அதிரடி நீக்கம்

புதுடெல்லி: குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்த யூடியூப் வீடியோக்கள் மற்றும் டிவீட்டுக்கள் பகிர்வதை தடை செய்வதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. குஜராத்தின் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் 2 பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடி தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செவ்வாயன்று இந்த ஆவணப்படம் வெளியான உடன் கடும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆவணப்படத்துக்கு அரசு தடை விதித்ததை அடுத்து சமூக வலைதளப்பக்கங்களில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிபிசி ஆவணப்படம் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் மற்றும் டிவிட்டர் பதிவுகளை பகிர்ந்து கொள்வதை தடை செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா, 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி ஆவணப்படத்தை பகிர்வதை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆவணப்படத்தின் இணைப்புக்களை கொண்ட 50க்கும் மேற்பட்ட டிவீட்டுக்களை தடை செய்யும்படி டிவிட்டர் நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியுறவு துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த ஆவணப்படத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆவணப்படம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம், அதன் மீதான நம்பகத்தன்மைக்கு அவதூறு ஏற்படுத்துவது, பல்வேறு சமூகங்களுக்கு இடையே பிரிவினைக்கு வித்திடுவது மற்றும் அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முயற்சியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து பிபிசி ஆவணப்படம் தொடர்பான டிவிட்டர் பயனர்களின் பகிர்வுகளை டிவிட்டர் நிர்வாகம் நீக்கி உள்ளது. இதை முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

* உள்நோக்கம் கொண்டது
பிபிசி வெளியிட்ட ஆவணப்படம், நமது தலைவர், சக இந்தியர் மற்றும் தேசபக்தருக்கு எதிரான உள்நோக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையாகும் என்று முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் அடங்கிய 302 பேர் கொண்ட குழுவினர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில், ‘‘இந்த ஆவணப்படம் நடுநிலையான விமர்சனம் கொண்டது இல்லை, படைப்பு சுதந்திரத்தை பயன்படுத்துவதை பற்றியும் அல்ல, மாறுபட்ட ஸ்தாபனத்திற்கு எதிரான கண்ணோட்டத்தை கொண்டதாக உள்ளது. முழுவதும் உண்மைக்கு புறம்பானது, இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

* வாஜ்பாய் ராஜதர்மத்தை நினைவுபடுத்தியது ஏன்?
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,‘‘பிரதமர் மோடி மற்றும் அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் புதிய பிபிசி ஆவணபடத்தை அவதூறானது என்கின்றனர். அதற்கு தடை விதித்துள்ளனர். அப்படியானால் 2002ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் வெளியேற நினைத்தது ஏன்? பிரதமர் வாஜ்பாய் ராஜதர்மம் குறித்து நினைவுபடுத்தியது ஏன்” என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அப்போதைய முதல்வர் மோடி அமர்ந்திருக்கும்போது ராஜதர்மம் குறித்து பிரதமர் வாஜ்பாய் பேசிய வீடியோகாட்சியையும் இணைத்துள்ளார்.


Tags : Union government ,BBC ,Gujarat ,riots ,Twitter , Union government bans BBC documentary on Gujarat riots: Twitter shares also removed
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...