நடிகர் எண்ணத்தில் இருந்த என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர்: ஜார்கண்ட் முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேச்சு

சென்னை: சென்னை, உயர் நீதிமன்ற வக்கீலாகவும், மூத்த நீதிபதியாகவும் பணியாற்றிய எம்.கற்கபவிநாயகம், ஜார்கண்ட் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 1972ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து சட்டத்தொழிலை தொடங்கினார். சட்டப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பெரியகருப்பன் வரவேற்று பேசினார். வக்கீல் எச்.மணிவண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,  ஆர்.சுரேஷ்குமார், ஜி.ஜெயச்சந்திரன், பி.புகழேந்தி, ஆர்.என்.மஞ்சுளா,  டி.பரத சக்கரவர்த்தி. சுந்தர் மோகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் குறுகிய காலமே தலைமை நீதிபதி பணியாற்றினாலும், யு.யு.லலித் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். என்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கியமானவர்கள் 3 பேர் ஒருவர் எம்.ஜி.ஆர், 2-வது என்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்த முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம், 3-வது என் மனைவி. எம்.ஜி.ஆருக்காக நான் ஜெயிலுக்கு சென்று இருக்கிறேன்.

அவருடன் தான் இருப்பேன்.  எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனதும், ஒருநாள் என்னை அழைத்து அரசு குற்றவியல் வக்கீலாக பதவி ஏற்க சொன்னார்.

அரசு வக்கீலாக பதவி ஏற்றேன். 7½ ஆண்டுகள் பணியாற்றினேன். அவர் நினைத்ததுபோல உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானேன். ஒருவேளை நான் நடிகராகி இருந்தால் என் வாழ்க்கையை தொலைத்து இருப்பேன். எம்.எல்.ஏ.வாகி இருந்தால், அமைச்சராகி பின்னர் ஜெயிலுக்கு போய் இருப்பேன். நான் நீதிபதியானேன்.

Related Stories: