×

ஆஸி. ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் பிளிஸ்கோவா: சானியா - போபண்ணா முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ரஷ்யாவின் வர்வரா கிராசெவாவுடன் (22 வயது, 97வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (30 வயது, 31வது ரேங்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் கரோலின் கார்சியா( பிரான்ஸ்), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), டோனா வேகிச் (குரோஷியா), அரினா சபலென்கா (பெலாரஸ்), சுவாய் ஸாங் (சீனா), லிண்டா புருஹ்விர்தோவா (17 வயது, செக்.) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கிரிகோர் திமித்ரோவை (பல்கேரியா) வீழ்த்தினார். டி மினார் (ஆஸி.), ருப்லேவ் (ரஷ்யா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர். இந்திய ஜோடி அசத்தல்: கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ் - லூக் செவில்லி ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6 (8-6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஐவன் டோடிக் (போஸ்னியா) - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை 2 மணி, 20 நிமிடம் போராடி வென்றது.


Tags : Aussie Open Tennis ,Pliskova ,Sania ,Bopanna , Aussie Open Tennis; Pliskova in Round 4: Sania - Bopanna progress
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...