தொடரை கைப்பற்றியது இந்தியா: நியூசிலாந்து பரிதாபம்

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஃபின் ஆலன், டிவோன் கான்வே இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் டக் அவுட்டாகி வெளியேற, நியூசிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ஹென்றி நிகோல்ஸ் 2, டேரில் மிட்செல் 1, டிவோன் கான்வே 7, கேப்டன் டாம் லாதம் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, நியூசி. 10.3 ஓவரில் 15 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பிலிப்ஸ் - பிரேஸ்வெல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. பிரேஸ்வெல் 22 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் வசம் பிடிபட்டார். அடுத்து பிலிப்சுடன் இணைந்த சான்ட்னர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இந்த ஜோடி 47 ரன் சேர்த்தது. சான்ட்னர் 27 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் கிளீன்போல்டாக, பிலிப்ஸ் 36 ரன், லோக்கி பெர்குசன் 1 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் சுழலில் அடுத்தடுத்து வெளியேறினர்.

டிக்னர் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து 34.3 ஓவரில் 108 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணி 5 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஷிப்லி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, ஹர்திக், வாஷிங்டன் தலா 2, சிராஜ், ஷர்துல், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர்.

ரோகித் 51 ரன் (50 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கோஹ்லி 11 ரன் எடுத்து வெளியேற, இந்தியா 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கில் 40 ரன் (53 பந்து, 6 பவுண்டரி), இஷான் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டி இந்தூர் நேரு ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. 

Related Stories: