ராகுல் யாத்திரை மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஜம்முவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 9 பேர் படுகாயம்

ஜம்மு: ராகுல் யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் ஜம்முவில் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நார்வால் நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது.

ஜம்மு காஷ்மீரின் நார்வால் பகுதியில் உள்ள கார் மெக்கானிக் கடையில் பழுது சரிசெய்வதற்காக வந்த கார் ஒன்றில் நேற்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

முதல் குண்டுவெடிப்பில்  5 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். இதனிடையே 15நிமிட இடைவெளியில் அடுத்த இடத்தில் மற்றொரு  குண்டு வெடித்து சிதறியது. அங்குள்ள குப்பை கிடங்கு அருகே இந்த குண்டு வெடித்தது. அடுத்தடுத்து குண்டு  வெடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரண்டாவது குண்டு வெடிப்பில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தை சிஆர்பிஎப் போலீசாரும், உள்ளூர் போலீசாரும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அங்கு வசித்து வரும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர். அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர  சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஐஇடி வகை குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். முதலில் வெடித்தது பழைய பொலிரோ காரில் வைக்கப்பட்ட குண்டு. காலை 11 மணிக்கு இந்த குண்டு வெடித்தது.

அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இரண்டாவது குண்டு வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் 7 பேர் ஜம்முவை சுகைல் இக்பால், வைஷ்கப் பிரதாப், வினோத்குமார், அர்ஜூன்குமார், அமித்குமார், ராஜேஷ்குமார், அனீஷ் என்பது தெரிய வந்தது.  சுஷில் குமார் மட்டும் தோடா பகுதியை சேர்ந்தவர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை யாத்திரை ஜம்மு பகுதிக்குள் நுழைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் யாத்திரை குழுவினர் உள்ளனர். நேற்று யாத்திரை இல்லை. இன்று ஹிராநகரில் இருந்து தொடங்கி நாளை ஜம்முவுக்குள் யாத்திரை நுழைய இருந்தது. இந்த நிலையில் குண்டு வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குடியரசு தினம் வரவுள்ள நிலையில்  அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* கவர்னர் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில்  நடந்த குண்டு வெடிப்புக்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக  உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.

* திட்டமிட்டபடி யாத்திரை நடக்கும்: காங்கிரஸ் அறிவிப்பு

காஷ்மீர் குண்டுவெடிப்பு பற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, ‘ காஷ்மீர் கவர்னரை நான் சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது  அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தாலும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும்’ என்றார்.

Related Stories: