×

கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு இபிஎஸ் - ஓபிஎஸ் போட்டா போட்டி: அண்ணாமலை, வாசன், ஜான்பாண்டியன், ஜெகன் மூர்த்தியுடன் தனித்தனியாக சந்திப்பு

சென்னை: கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி தலைவர்களைதான், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இந்த வரலாற்றை புரட்டி போட்டுள்ளது. அதிமுகவின் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை போட்டி போட்டு சந்தித்து ஆதரவு கேட்டனர். இது அதிமுகவின் உண்மையான தொண்டர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது.

திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படலாம். அநேகமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது சஞ்சய் சம்பத் களம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ தகவலை காங்கிரஸ் மேலிடம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் தனித்தனியாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் தலைமையில், ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். அவர் எடப்பாடி அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் திடீரென அதிமுகவில் தங்கள் அணியும் போட்டியிடும் என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது ஓபிஎஸ் அணி சார்பில் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, தங்கள் அணி சார்பில் இறக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ஜி.கே.வாசனும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்து அவர்களை வழியனுப்பி உள்ளார். இது ஒருபுறம் இருக்க இபிஎஸ் அணியினர், நேற்று மாலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தனர். அங்கு இபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பாஜ தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர். சந்திப்பின் போது பாஜ தரப்பில் மூத்த தலைவர் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சக்ரவர்த்தி, வி.பி.துரைசாமி, கரு நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பின் போது இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இபிஎஸ் அணியினர் ஆதரவு கோரினர். அவர்கள் சந்தித்து சென்ற அடுத்த நிமிடமே ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாஜ தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ் இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் பாஜ இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்க தயார். இல்லாவிட்டால் உங்களுடைய ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து சில நொடிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பாஜ தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் ஆதரவு கோரியதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் பாஜ திணறி வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் பாஜ சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா என்றும் பாஜ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் இடைத்தேர்தல் அறிவித்த மறுநிமிடமே தேர்தல் பணிகளை கவனிக்கும் வகையில் பாஜ தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அண்ணாமலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜ சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் ஓபிஎஸ் ஆதரவு கிடைக்கும் என்று பாஜ கருதுவதாக  கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார். இதனால், பாஜ யாரை ஆதரிக்க போகிறது அல்லது இடைத்தேர்தலில் பாஜ போட்டியிட போகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஓரிரு நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் கூட்டணி கட்சி தலைவர்களை மாறி, மாறி சந்தித்து ஆதரவு கோரினர். அதாவது தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி  தலைவர் எம்.ஜெகன் மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர். அதே நேரத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதனால், பாமக தலைவர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

அதே நேரத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவிப்பது வழக்கம். இது தான் காலம், காலமாக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த இடைத்தேர்தல் இதனை புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஓபிஎஸ், இபிஎஸ் அணியை சேர்ந்த தலைவர்கள், கூட்டணி கட்சியினரின் அலுவலகம், அலுவலகமாக ஏறி, இறங்கி ஆதரவு கோரியுள்ளனர்.

அதுவும் செல்வாக்கு இல்லாத கட்சிகளிடமும், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிர்வாகிகளே இல்லாத கட்சிகளிடமும் இரு கட்சிகளின் தலைவர்களும் வலிந்து சென்று ஆதரவு கேட்டு நிற்பதைப் பார்த்து அதிமுகவில் உள்ள உண்மை தொண்டர்கள் எப்படி எல்லாம் கட்சியை வளர்த்தோம். ஆனால், இப்போது ஆதரவு தேடி கூட்டணி கட்சியினரின் அலுவலகத்தில் தவமாக கிடப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஜெகன் மூர்த்தி மட்டும் எடப்பாடிக்கு ஆதரவு என்று கூறியுள்ளார். ஆனால் ஜான் பாண்டியனோ, இரட்டை இலை சின்னம் இருக்கும் கட்சிக்கு ஆதரவு என்று கூறியுள்ளார். பாஜ இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

Tags : EPS - ,Bhota ,Annamalai ,Vasan ,Janpandian ,Jagan Murthy , EPS-OPS Bhota contest seeking support from alliance parties: Separate meeting with Annamalai, Vasan, Janpandian, Jagan Murthy
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...