×

ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஆன்மிக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படுகின்ற ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (21.01.2023) திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்கு உபயதாரால் வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கினை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலோடு,  நாள்தோறும் திருப்பணிகள், எங்கு பார்த்தாலும் கும்பாபிஷேகங்கள், திருத்தேர்கள், திருக்குளங்கள் சீரமைப்பு,  நந்தவனங்கள், பூங்காக்கள் மேம்பாடு, நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள், எங்கு பார்த்தாலும் தேவாரம் திருவாசகம் தமிழில் அர்ச்சனை போற்றிகள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த திருக்கோயில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற சுமார் 72,000 திருக்கோயிலிலும் தினந்தோறும் நடைபெற வேண்டிய நித்தியபடிகள், பூஜைகள், புனஸ்காரங்கள் தங்குதடையில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.
 
அந்த வகையில் இன்றைக்கு திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் எம்பெருமான் ஆண்டுக்கு நான்கு முறை வீதி உலா வருவதற்கு 15 லட்ச ரூபாய் செலவில் ஒரு வெள்ளி பல்லக்கு ஸ்ரீபார்த்தசாரதி ஸ்ரீபாதம் ட்ரஸ்டின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பல்லக்கை இன்றைக்கு திருக்கோயில் வசம் ஒப்படைக்கின்ற இனிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே மரப்பல்லக்கில் சென்று வந்த எம்பெருமான் சுவாமிகள் இதன்பிறகு வெள்ளி பல்லாக்கில் செல்கின்ற ஒரு நல்ல நிலையை உபயதாரர்கள் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்ததாக செய்தியாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அப்படி என்றால் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்களை பராமரிப்பது யார்? திருக்கோயிலில் இருக்கக்கூடாது என்கிறாரா? தெய்வங்களுக்கு நடக்கக்கூடிய பூஜைகள்.

புனஸ்காரங்கள் நடக்கக் கூடாது என்று பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல கடமைபட்டு இருக்கின்றோம். எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பொதுவாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நாங்கள் கவலை கொள்வதில்லை.

முதலமைச்சர் விமர்சனங்களை பற்றியும், குற்றச்சாட்டுகளைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் குறைகள் என்றால் அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுங்கள், வேண்டுமென்று குறை கூறுபவர்களை நாம் எந்த காலத்திலும் எந்த வகையிலும் திருத்த முடியாது என்றும், தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்றும் எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார் ஆகவே இது போன்ற ஆதாரமற்ற பேச்சுகள், பொதுவாக அள்ளி வீசுகின்ற அவதூறுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதாக இல்லை.

குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டை கூறினாலும் அதற்கு பதில் சொல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை எந்நாளும் தயாராக இருக்கிறது என்பதை குற்றம் சொல்பவர்களுக்கு நான் பதிலாக கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

திருக்கோயிலில் காணிக்கையாக வரப்பெற்ற பணத்தை செலவு செய்து தான் கூட்டம் நடைபெற்றது என்ற குற்றசாட்டிற்கு எங்க கூட்டம் நடைபெற்றது என்று சுட்டிக் காட்ட வேண்டும். அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.  

குறிப்பிட்டு நீங்கள் குற்றச்சாட்டு சொன்னால் அந்த குற்றச்சாட்டிற்குண்டான பதிலை நாங்கள் அளிக்க தயாராக இருக்கின்றோம். இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட திட்டங்கள் என்னென்ன வழி வகுத்திருக்கின்றதோ, எதற்கெல்லாம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்களோ அந்த வழிமுறைகளின்படி தான் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் செலவுகளை செய்கிறோமே தவிர அனாவசியமாக எந்த செலவும் செய்யவில்லை.  

என்னை நானே மிகைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து ஒரு உதவியாளரை கூட நான் பெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக இதுவரையில் ஒரு வாகனத்தைக் கூட என் சொந்த உபயோகத்திற்கோ, என் வீட்டு உபயோகத்திற்கோ பெறவில்லை.

முதலமைச்சர் இறையன்பர்களிமிருந்து காணிக்கையாக வரப் பெறுகின்ற சொத்துகளை இறை அன்பர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையிலே அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையிலே பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு தான் செலவிட வேண்டும் என்று கண்டிப்போடு உத்தரவிட்டு இருக்கின்றார். அந்த உத்தரவின் படி என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றதோ அதன்படி தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆடம்பர, அனாவசியமான செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை.
 
இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை உயர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் 354 பேர்கள் இரட்டிப்பாக ஊதியம் பெற்று பயன்பெறுகின்றனர்.  இதனால் ஆண்டுதோறும் கூடுதலாக 2 கோடியே 73 லட்ச ரூபாய் திருக்கோயில்களுக்கு செலவு ஏற்படும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அவர்களை சட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்வதற்கு உண்டான வாய்ப்பு இல்லை என்று உயர்கல்வித்துறை கூறி இருப்பதால் இந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்திருக்கின்றோம். ஊடகத் துறையினர் அதனைப் புரிந்து கொண்டு அதை வரவேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கிருக்கின்ற விலை உயர்ந்த சிலைகளும் விலை உயர்ந்த பொருள்களும் திட்டமிட்டு திமுக களவாடுகிறது என்று கூறுகின்றனர். அவருடைய கூற்றுப்படி பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் இருந்து களவு போன சிலைகள் அத்தனையும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அதாவது 282 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பல மேலைநாடுகளில் இருக்கின்ற 62 சிலைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மீட்டு வருகின்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம்.

எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு களவு போன 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கையில் இருக்கின்ற காவல் துறையால் தான் என்பதை உங்களுக்கு பதிலாக கூட கடமைப்பட்டிருக்கின்றேன். திமுக தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்த ஆட்சி ஒரு ஆன்மிக புரட்சி ஆட்சி என்றே சொல்லலாம். திருக்கோயில்களை பொறுத்த அளவில் 2500 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும்  பகுதியில் இருக்கும் திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் வீதம் ரூ.50 கோடி நிதி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 2500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு தான் நிதி வழங்கினார்கள். ஆனால் ஒரே ஆண்டில் 2500 திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.50 கோடி வழங்கிய பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை சாரும். அதேபோல் ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாயை 2 இலட்சமாக உயர்த்தி  ஒரே தவணையில் 129.50 கோடியை வைப்பு நிதியாக வழங்கியவர் முதலமைச்சர் .

அதோடு நில்லாமல் இதுவரையில் சுமார் 4,000-த்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் 1,817 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு அந்த திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. திருக்கோயில்களி பணியாற்றிய அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தியும் கிராமபுற பூசாரிகளுக்கு ஓய்வூதியமாக 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல, மத்திய அரசு,  மாநில அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அதே அகவிலைப்படியை  திருக்கோயிலில் பணியாற்றுகின்ற 10,000 மேற்பட்ட பணியாளர்களுக்கு உயர்த்தி வழங்கிய ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் திருக்கோயிலில் பணியாற்றுகின்ற 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கியதோடு, அவர்களுக்கு கருணைத் தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தி தந்த அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு. 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களில் 104 திருக்கோயில்களை புனரமைப்பு  செய்திட 100 கோடி ரூபாய் வாரி வழங்கிய ஆட்சி இந்த ஆட்சி. இவையெல்லாம் திருப்பணிகள் இல்லை என்று ஏசுபவர்களின் கண்ணுக்கு தெரிகின்றது.

ஆனால் உண்மையில் பக்தர்களுக்கும், மனசாட்சி உள்ளவர்களும், குறை கூறுகின்ற எதிர்கட்சியினரும் கூட இந்த ஆட்சி ஆன்மிக வரலாற்றில் சிறப்புமிக்க பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படுகின்ற ஒரு புரட்சியை ஏற்படுத்துகின்ற ஆட்சி என்று வெகுவாக பாராட்டப்படுகின்ற ஆட்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உண்ணாவிரதம், அறப்போராட்டம் நடத்துபவர்கள் குறிப்பிட்டு எந்த குறையை எங்கள் மீது சுமத்தினாலும், சுட்டிக்காட்டினாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்த ஆட்சி தயாராக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.

நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆட்சி வந்த பிறகு 6 திருக்கோவில்களில் சேர்க்கப்பட்டு முழு நேர அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மலைக் கோயில்கள் உள்பட மக்கள் அதிகமாக வருகின்ற 15 திருக்கோயில்களில்  மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் 500 இணைகளுக்கு கட்டணமில்லா திருமணத்தை நடத்தி வைக்கின்ற ஆட்சியாகவும், மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று 12 திருக்கோயில்களில் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை நடத்துகின்ற ஆட்சியாகவும் இந்த ஆட்சி திகழ்கின்றது.

இப்படி எல்லா வகையிலும் புரட்சி ஏற்படுத்துகின்ற இந்த ஆட்சியை வேண்டும் என்று குறை செல்பவர்களுக்கு பதில் சொல்லி எங்களுடைய நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சி ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சியில் இறையன்பர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதோடு தெய்வங்களும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றன  என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் . கே.ரேணுகாதேவி, துணை ஆணையர்கள் கவெனிதா, ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Chief Minister- ,Government ,Minister ,Sekarbabu , The government led by the Chief Minister of Tamil Nadu is a government that will cause a spiritual revolution: Minister Shekharbabu informs
× RELATED விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு...