×

பிப்ரவரியில் தொடங்கப்படும் கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு காவல்துறை

சென்னை: கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரியில் தொடங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழக மீனவர்களின் வாரிசுகளுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக், மாலுமி பணி, இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதல் அணிக்கான 90 நாட்கள் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், 2-வது அணிக்கான பயிற்சி வகுப்பு வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இந்த 90 நாட்கள் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மீனவ வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகம், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகம், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், http://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp=sharing என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், 3 மாதம் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Police , Descendants of fishermen can apply for Coast Guard training course to be launched in February: Tamilnadu Police
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...