சென்னை: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் ஆண்டு மதிப்பில் 7 சதவீதம் சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டு ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 சதவீதம் பிரித்து வசூலிக்கப்படுகிறது. குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி சொத்து வரியின் ஒரு பகுதியாகும். இந்த வரியானது ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் மேற்குறிப்பிட்ட குடிநீர் வரி/கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும் செலுத்திட வேண்டும். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் நிலுவை இருப்பின், அதை உடனடியாக செலுத்திட வேண்டும். அவ்வாறு, செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லையெனில் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்து வாரிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் வருவாய் வசூல் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜப்தி செய்யப்படும்.வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.மேலும், நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாகவும் செலுத்தலாம். மேலும், பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாகவும் செலுத்தலாம். மேலும் நுகர்வோர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை செலுத்துவதற்கு ஏதுவாக கியூ ஆர் கோடு (Q R Code) மூலம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.