×

ஜம்முவின் நர்வால் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு: குடியரசு தினத்துக்கு 4 நாட்களே இருக்கும் நிலையில் தாக்குதல்..!!

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வரும் ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவின் நர்வால் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இன்று காலை 11.20 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் நிகழ்விடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதை அடுத்து அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர் மேலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பிவைத்தனர். இரட்டை குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்திவருகிறது.

மேலும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்திற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Tags : Narwal ,Jammu ,Republic , Jammu, Narwal area, twin blasts, Republic Day, 4 days away
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...